மாண்டஸ் புயலின் தாக்கத்தால் சென்னை மாநகரில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நன்மையும் அரங்கேறி உள்ளது. மெரினா கடலில் மிதந்த குப்பைகளை மாண்டஸ் புயல் அகற்றி சுத்தப்படுத்தி உள்ளது. மெரினாவில் நேற்று இரவு கடுமையான கடல் சீற்றம் காணப்பட்டதால் பல அடி உயரத்துக்கு எழும்பிய ராட்சத அலைகள் கடலின் மேற்பரப்பில் பரவி கிடந்த மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பை கூளங்களை வாரி சுருட்டி கரைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த குப்பைகள் அனைத்தும் தற்போது மெரினா சர்வீஸ் சாலையில் குவிந்து கிடக்கின்றன. இதனை அகற்றி அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற்கரை பகல் மற்றும் இரவு நேரங்களில் திறந்தவெளி பாராக குடிமகன்களின் கூடாரமாக செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது. கடலில் மிதந்து புயலால் கரை ஒதுங்கியுள்ள கணக்கில் அடங்காத மதுபாட்டில்களே இதற்கு சாட்சியாக உள்ளன. எனவே வரும் காலங்களில் மெரினாவில் மது குடித்து கும்மாளம் அடிப்பவர்களை போலீசார் அடக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. மெரினா கடல் பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி கடற்கரை மணல் பரப்பும் கடல் போலவே காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது. சர்வீஸ் சாலையிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று இரவு வேகம் காட்டிய சூறாவளி காற்றால் மெரினாவில் உள்ள கடைகளும் சேதம் அடைந்துள்ளன. இதையடுத்து கடைகளில் இருந்த பொருட்களை வியாபாரிகள் இன்று காலையில் தேடி எடுத்தனர். இதே போன்று பெசன்ட் நகர் கடற்கரை பகுதியும் காணப்பட்டது. பெசன்ட் நகர் சர்வீஸ் சாலை முழுவதும் கடற்கரை மணல் குவிந்து கிடந்ததை காண முடிந்தது.