Skip to content
Home » அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி – வேலை வாய்ப்புகளுக்காக சென்னை, திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மணப்பாறையைச் சுற்றிலும் ஏராளமான சிறு தொழில் முனைவோர் உள்ளனர். புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயத்த ஆடைகள் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இதுதவிர, தமிழ் வளர்த்த கருமுத்து தியாகராஜ செட்டியாரால் தொடங்கப் பெற்ற பழமை வாய்ந்த மீனாட்சி நூற்பாலை, மாரீ° நூற்பாலை உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் இரண்டாம் அலகு தொழிற்சாலையும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அண்மையில் தொடங்கப்பெற்ற சிப்காட் தொழிற்பேட்டையும் மணப்பாறையில் உள்ளது.

இந்தத் தொழிற்சாலைகளில் ஏறத்தாழ ஐந்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று சென்றன. அதனால்தான் மணி ஐயர் தயாரித்து மணப்பாறை ரயில் நிலைய °டாலில் விற்கப்பட்ட மணப்பாறை முறுக்கு உலகப் புகழ் கிடைத்தது.

 

திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இண்டர்சிட்டி ரயில் மணப்பாறையில் நிற்க வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த அனைத்துக் கட்சிகளின் போராட்டக் குழுவின் சார்பில் 2014-ம் ஆண்டு உண்ணாவிரதம், கடையடைப்பு என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு திருச்சி ரயில் நிலைய நிகழ்ச்சிக்கு வந்த அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இண்டர்சிட்டி ரயில் மணப்பாறையில் நிற்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை முன்வைத்துப் பேசியதும், அன்றைய தினமே இண்டர்சிட்டி ரயில் மணப்பாறையில் நிற்கும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்ததும் நினைவு கூரத்தக்கது.

அதேபோல, 2018-ல் மதிமுக நடத்திய ரயில் மறியல் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை துரித ரயில் மணப்பாறையில் நின்று செல்கின்றது.

இருவழி நிறுத்தமாக இருந்த பாண்டியன் விரைவு ரயில், தற்போது மதுரை – சென்னை ஒருவழித் தடத்தில் மட்டுமே நின்று செல்கிறது. எனவே சென்னை – மதுரை ரயிலையும்,

வாரம் மூன்று முறை இயக்கப்படும் ராமேஸ்வரம்-திருப்பதி துரித ரயில், தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகின்ற அந்த்யோதயா உள்ளிட்ட மணப்பாறை வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களையும் மணப்பாறையில் நிறுத்த கேட்டுக்கொள்கிறேன்.

தற்சமயம், மணப்பாறை ரயில் நிலையத்தில் மாதம் ரூ.15 லட்சம் பயணச்சீட்டு வருமானம் கிடைக்கின்றது.

மணப்பாறையில் அனைத்து ரயில்களையும் நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கை பொதுமக்களிடம் தற்போது வலுத்து வருகின்றது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாளை மறுநாள்( திங்கள்கிழமை) மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மதிமுக சார்பாக திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக  செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில், மணப்பாறை நகரச்செயலாளர் எம்.கே.முத்துப்பாண்டி, மணப்பாறை ஒன்றியச் செயலாளர்கள் ஆ.துரைராஜ், ப.சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் ரயில் மறியல் போராட்டம் மணப்பாறையில் நடைபெற உள்ளது.

ஆகவே, மணப்பாறை மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, மத்திய ரயில்வே நிர்வாகம் மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *