திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நேற்று மாலை பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி (special Jamboree) விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கி வைத்தார். விழாவுக்கு வந்த துணை முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து விழா நடைபெறும் தொடக்க வாயிலிலிருந்து தாரை தப்பட்டை முழுங்க கரகாட்டம் ஆடியும், பெண்கள் முளைப்பாரி ஏந்தியும் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 500 -க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, திருக்குவளை இல்லத்தில்
அன்னை அஞ்சுகத் தாய்க்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய புகைப்படம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறப்பு உள்ளிட்ட கலைஞரின் சாதனைகள் அடங்கிய சிறப்பு வாய்ந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குளோபல் டெவலப்மென்ட் வில்லேஜை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.சாரண சாரணியரின் முறைப்பாடி துணை முதல்வர் உதயநிதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி (special Jamboree) விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கி வைத்து இலங்கை, மலேஷியா, சவுதி அரேபியா, நேபாளம், மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில பாரத சாரண – சாரணியர் கம்பீரமாக அணி வகுத்து வந்தனர், அணி வகுப்பு மரியாதையை துணை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
20 ஆயிரம் பாரத சாரண – சாரணியர் எழுந்து நின்று அவர்கள் முறைப்படி கைதட்டி துணை முதமைச்சரை வரவேற்றனர்.
முதலாவதாக தமிழ்நாடு பாரத சாரண – சாரணியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.
வைர விழா பெருந்திரளணி குறித்த சிறப்பிதழ் மற்றும் அஞ்சல் உறையை துணை முதலமைச்சர் வெளியிட்டார்.
தொடர்ந்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சிறப்பு கையேட்டினை வெளியிட்டார். 20,000 சாரணர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி உலக சாதனை படைத்தனர்.
இதில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் யு.டி.காதர், பாரத சாரண – சாரணியர் இயக்கத்தின் தேசிய முதன்மை ஆணையரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான கே.கே.கண்டேல்வால் , பாரத சாரண – சாரணியர் இயக்கத்தின் தலைவர் முனைவர் அனில்குமார் ஜெயின், தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வைரவிழாவின் துணைத் தலைவரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, வைரவிழாவின் துணைத் தலைவரும், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், வைரவிழாவின் துணைத் தலைவரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ , ஜோதிமணி , சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், பழனியாண்டி, முத்துராஜா, அப்துல் சமது, பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் மதுமதி ,மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கினார்.
2000 ம் ஆண்டு தான் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் 50 ஆவது ஆண்டு நிகழ்ச்சி நடந்தது.
நம்முடைய முதலமைச்சர் ஆட்சியில் வைர விழா நடக்கிறது, ரூ.39 கோடியை அரசு இந்த நிகழ்ச்சிக்கு ஒதுக்கியது, 3 மாதங்களாக அன்பில் மகேஷ் இந்த பணியை செய்து வருகிறார், சமீபத்தில் ஸ்கவுட் டிரஸ்சில் அமைச்சர் வந்தார், இந்த நிகழ்ச்சியோடு அவர் ஒன்றி போய்விட்டார்…
தமிழ்நாடு கலாச்சார பாரம்பரியங்களை தெரிந்து கொள்ள மற்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சி உதவியாக அமையும், அதேபோல் மற்ற மாநில கலாச்சாரத்தையும் நாம் தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும்…
உங்கள் படிப்பை தவிர சிறந்த முறையில் வாழ்க்கையை கற்று கொள்ள உதவும், இது மாதிரியான அனுபவம் கிடைப்பது விலை மதிப்பில்லாத சொத்து.
ஜாதி மதத்தை கடந்து இந்தியாவின் குடிமகன் என்று அனைவரும் ஒரே இடத்தில் கூடி உள்ளீர்கள், மனிதர்கள் வேறுபாடு பார்க்காமல், ஒன்று கூடி வாழ வேண்டும் என்பதுதான் கலைஞர் அவர்களின் குறிக்கோள், அது தான் பெரியார் சமத்துவபுரம் திட்டம்.
கலைஞர் நூற்றாண்டு விழாவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதில் தமிழ்நாட்டிற்கு பெருமை, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது:
தமிழ்நாடு பண்டைய நாகரிகம், பாரம்பரியம், அமைதி மற்றும் எல்லையில்லா அன்பின் பூமி. தமிழகம் வந்துள்ள அனைத்து சகோதர சகோதரிகளையும் அன்புடன் வரவேற்கிறேன்.
இந்த வைரவிழா நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஆதரவையும் ஊக்கத்தையும் நமது முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்.
முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கலாசாரம், அறிவியல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, சாரணர் மற்றும் வழிகாட்டி சேவையிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
சாரணர் இயக்கம் 1907 ல் இங்கிலாந்தில் பேடன் பவல் பிரபுவால் நிறுவப்பட்டது. இது படிப்படியாக உலகம் முழுவதும் பரவியபோது, தமிழ்நாடு 1919 ம் ஆண்டிலேயே சாரணர் இயக்கத்தை ஏற்றுக்கொண்டது, இது பல பகுதிகளை விட மிகவும் முன்னதாகவே. முதலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாரணர் இயக்கங்கள் நிறுவப்பட்டு மண்டல அளவில் செயல்படத் தொடங்கின. பலர் இந்த இயக்கத்தில் ஆர்வத்துடன் இணைந்து மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவை செய்யத் தொடங்கினர்.
1929 ம் ஆண்டு லண்டனில் உள்ள பிர்கன்ஹெட் அரோவ் பூங்காவில் நடைபெற்ற உலக ஜாம்போரியில் தமிழ்நாடு சாரணர்கள் கலந்து கொண்டனர். சாரணர் இயக்கத்தின் மீது தமிழ்நாடு காட்டிய ஆழ்ந்த அர்ப்பணிப்பை காட்டுகிறது…
இயக்கத்தின் நிறுவனர், லார்ட் பேடன் பவல், சிறுவர்களுக்கான சாரணர் என்ற புத்தகத்தை எழுதி, அதை பரவலாக விநியோகித்தார். இந்த புத்தகம் அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது, ஆனால் அது தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் இந்நூலின் தமிழாக்கம் செய்யப்பட்டது….
பாரத சாரணர் மற்றும் வழிகாட்டி வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு ஜம்போரி உங்கள் அனுபவம். கலந்து கொள்ளும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்….
பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் பொன்விழாவை முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ்நாட்டில் மிகப் பிரமாண்டமாக நடத்தினார். அப்போதைய கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் சென்னையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சாரணர் இயக்கத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் முழு தேசத்தின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நடைபெறுவதை முத்தமிழ் அறிஞர் கலைஞர் உறுதி செய்தார். அந்த வரலாற்றுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, தற்போதைய திராவிட மாடல் அரசு இந்த வைர விழா நிகழ்ச்சியை நடத்துகிறது என்றார்….
கர்நாடக துணை முதலைசர் டி.கே.சிவகுமார் பேச்சு
துணை முதல்வர் உதயநிதிக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன், உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்…
உலகின் பல நாடுகளில் இருந்து வந்தவர்களை பார்ப்பதில் மகிழ்ச்சி…
இந்த மாநிலம் சிறந்து விளங்கி வருகிறது அதற்கு காரணம் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் தொலைநோக்கு திட்டம் என்றார்….
பாரத சாரண – சாரணியர் இயக்கத்தின் தேசிய முதன்மை ஆணையர் முனைவர் கே.கே.கண்டேல்வால் பேசும்போது,
இது ஒரு சிறப்பான நிகழ்ச்சி, 75 வது ஆண்டு விழாவை நாம் இங்கு கொண்டாடி வருகிறோம்…
கலைஞர் அவர்கள் இலக்கியத்திற்காகவும், சமூகத்திற்காகவும் போராடியவர், பன்முகத்தன்மை கொண்டவர் கலைஞர் .
கலைஞர் அவர்கள் ஒரு மாநில தலைவர் மட்டும் கிடையாது அவர் ஒரு தொலைநோக்கு பார்வையுடையவர் என்றார்…