திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூலாம்பட்டி புனித அந்தோணியார் கோவில் பொங்கல் விழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டியில் பங்கேற்க திருச்சி, தஞ்சை, திண்டுக்கல்,மதுரை புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தது. அவைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதுபோல பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடு பிடி வீரர்கள் 350 பேர் வந்திருந்தனர். அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் போட்டி தொடங்கியது. முதலில் கோயில் காளைகள் விடப்பட்டன. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு காளைகளும் வாடிவாசல் வழியாக விடப்பட்டன. வீரர்கள் போட்டிபோட்டு காளைகளை அடக்கி தங்க மோதிரம் உள்ளிட்ட பரிசுகளை வென்றனர். வீரர்களால் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை காண பல்லாயிரகணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.