கர்நாடகாவின் கலபுருகி மாவட்டத்தில் உள்ள பீமா நிதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை கண்காணிப்பதற்காக மாவட்ட போலீசார் தினசரி பீமா நதியை ஓட்டிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று இரவு கலபுருகி மாவட்டத்தின், ஜெயவர்கி தாலுகாவில் உள்ள நாராயணபுரா பகுதியில் உள்ள பீமா நதியில் இருந்து சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நாராயணபுறா காவல் நிலையத்தின் தலைமை காவலர் மயூர் மற்றும் பிரமோத் ஆகிய இருவரும் நேற்று இரவு அப்பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது சட்டம் விரோதமாக மணலை அள்ளிச் சென்று கொண்டிருந்த ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்த முயன்ற போது அந்த டிராக்டரின் ஓட்டுனர் காவல்துறை அதிகாரி எனவும் பாராமல் அவர் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மற்றொரு காவல்துறை அதிகாரி தப்பி ஓடிய சித்தண்ணா என்ற குற்றவாளியை துரத்தி சென்று கைது செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள மேலும் பல மணல் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதனிடையே கலபுருகி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான பிரியங் கார்கே தன்னை தொடர்பு கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஈஷா பண்ட் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறான குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பும் தங்களுக்கு தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற போலீசார் மீது வாகனம் ஏற்று கொலை செய்திருக்கும் சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.