அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த நாகல் குழி கிராமத்தைச் சேர்ந்த 1. ராஜேஷ் (23) த/பெ ராஜேந்திரன் 2. பில்லா @ வினோத் குமார் (26) த/பெ கொளஞ்சியப்பன் மற்றும் வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்த 3. சரண் (19) த/பெ ஆகிய மூவரும் வெள்ளாற்றில் டாட்டா ஏஸ் வாகனம் மூலம் சட்ட விரோதமாக மணல் திருடி விற்று வந்துள்ளனர்.கடந்த 15.09.2024 காலை 12:45 மணியளவில் மணல் திருட டாட்டா ஏஸ் வாகனத்தை எடுத்துக்கொண்டு சிவராமபுரம் வளைவு அருகே வந்துள்ளனர். சந்தேகத்துக்கு இடமாக வந்த வாகனத்தை இரவு ரோந்து பணியில் இருந்த தளவாய் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊர்க்காவல் படை காவலர் வெங்கடேசன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டிய ராஜேஷ் நிறுத்துவது போல் பொறுமையாக வந்து திடீரென்று அதிவேகமாக வாகனத்தை இயக்கி, காவலரின் இருசக்கர வாகனத்தை பக்கவாட்டில் மோதியதில் காவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊர்க்காவல் படை காவலர் வெங்கடேசன் ஆகியோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு, அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 15.09.2024 அன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் குவாகம் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜவேல் தலைமையிலான தனிப்படை போலீசார், மேற்குறிப்பிட்ட மூவரையும் நேற்று இரவு கைது செய்து, டாட்டா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதில் வினோத் மீது இரும்புலிகுறிச்சி மற்றும் குவாகம் காவல் நிலையத்தில் மணல் திருட்டு வழக்கு உள்ளது. அதேபோல் சரண் மீது குவாகம் காவல் நிலையத்தில் மணல் திருட்டு வழக்கு உள்ளது. முதற்கட்டமாக மூவரின் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற அடைப்பு காவலில் போலீசார் அடைத்தனர்.