அரியலூர் மாவட்டம் செந்துறை உள்ள தளவாய் போலீஸ் பணியில் இருப்பவர் தமிழ்ச்செல்வன். இவர் நேற்று நள்ளிரவு ஊர்க் காவல் படை வீரர் வெங்கடேசன் என்பவருடன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார்.
இவர்கள அன்னாசி நல்லூர் -அங்கனூர் சாலையில் சென்று கொண்டு இருந்த போது இவர்களுக்கு முன்னாள் ஒரு மினி லாரி செல்வதைக் கண்டனர். அதில் மணல் இருந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து போலீசார் லாரியை முந்தி சென்று பிடிக்க
முயற்சி செய்தார். இதனைக் கண்ட டிரைவர் சுதாரித்துக் கொண்டு மினி லாரியை போலீசார் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றார். இந்த மோதலில் கீழே விழுந்த தமிழ்ச்செல்வனுக்கு கை முறிந்தது, வெங்கடேசனுக்கு காயங்கள் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உடனடியாக மருத்துவ மனைக்கு சென்று காயமடைந்த போலீசாருக்கு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து போலீசார் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற நபர்களை உடனடியாக கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் செந்துறை பகுதியில் முகாமிட்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசார் மீது மினி லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.