Skip to content

தஞ்சை… தென்னையில் சுருள்….. மேலாண்மை விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள, துவரங்குறிச்சியில்,
வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து, தென்னையில் சுருள் வெள்ளை ஈ பற்றிய மேலாண்மை விழிப்புணர்வு முகாம்  நேற்று நடத்தினர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில், வெள்ளை ஈ பரவுதல் மற்றும் தாக்குதல், கட்டுப்படுத்தும் முறைகளை பற்றி வேப்பங்குளம்தென்னை ஆராய்ச்சி நிலையம், இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கை. குமணன் விளக்கிக் கூறினார். பட்டுக்கோட்டை தோட்டக்கலை அலுவலர் செ.கார்த்திகா, வெள்ளை ஈ கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை பற்றி கூறினார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம், உதவிப் பேராசிரியர் (பூச்சியியல்) முனைவர் நா. முத்துக்குமரன், வெள்ளை ஈக்களை அழிக்க மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களை கட்டும் முறைகள், என்கார்சியா ஒட்டுண்ணிகளை பாதிக்கப்பட்ட தென்னை மரத்தில் விடும் முறை, வேப்பெண்ணெய் கரைசல் தயாரிக்கும் முறை மேலும் மைதா மாவு கரைசல் கொண்டு கரும்பூசணத்தை நீக்கும் முறைகளை எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் செயல்விளக்கம் கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி இராமையன் என்பவர் தோட்டத்தில் நடைபெற்றது. வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம், இணைப்பேராசிரியர் (நோயியல்) முனைவர் ம. சுருளிராஜன் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்து கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில், தென்னையில் சுருள் வெள்ளை ஈயை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் முறைகளை விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டதோடு, கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், சுமார் 25க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

error: Content is protected !!