போலி பாஸ்போரட்டில் மலேசியா செல்லமுயன்ற நபர் கைது..
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் அகமது ஜலாலுதீன் (52). இவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்துள்ளார். அங்கு இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஜலாலுதீன் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பிறந்த தேதி மற்றும் முகவரியை மாற்றிகொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இது குறித்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் ஜலாலுதினை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு..
திருச்சி, கருமண்டபம், ஜெயா நகர் விஸ்தரிப்பைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ஜஸ்டின் க்ளாரா (46). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் க்ளாரா சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு வீடுதிரும்பியபோது அவரது வீட்டின் அருகே எதிரே டூவீலரில் வந்த மர்மநபர் க்ளாரா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து க்ளாரா அளித்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.