தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 04.12.2024-ம் தேதி வல்லம் உட்கோட்டம் மாதாக்கோட்டை ரோடு, பொன்னி நகர் பகுதியில் பணி முடிந்து நடந்து சென்ற காவிரி நகர் பகுதியை சேர்ந்த ஆசிரியை சாந்தியிடம் இருந்து நான்கு பவுன் தங்க சங்கிலி வழிப்பறி செய்யப்பட்டது. இது குறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் தமிழ்ப்பல்கலைக்கழக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கின் விசாரணையில் CCTV கேமராக்களை கண்காணித்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குற்றவாளியான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (43) என்பவர் வல்லம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் கணேஷ் குமார் மேற்பார்வையில் தனிப்படை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் அடங்கிய குழுவினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடமிருந்து 4 சவரன் தங்கநகை மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதை எடுத்து முத்துக்குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட முத்துக்குமார் மீது புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக வல்லம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் கணேஷ் குமார் மற்றும் தனிப்படை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் தனி படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் வெகுவாக பாராட்டினார்.