மயிலாடுதுறை அருகே பில்லா வடந்தை என்ற கிராமத்தில் மது போதையில் மயங்கி நிலையில் இருந்த இருவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் பூச்சி மருந்து விஷத்தின் கடுமையால்ஜெரால்டு(23) சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவருடன் சேர்க்கப்பட்ட ஜோதிபாசு(34) மேல் சிகிச்சைக்காக திருவாரூர் கொண்டு செல்லப்பட்டார். பெரம்பூர், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜோதிபாசுவின் மனைவி பிரிந்து சென்றதால் துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொள்ள மதுவில் விஷம் கலந்து வைத்திருந்த பாட்டிலை அங்கே போதையுடன் வந்த நண்பர் ஜெரால்டு எடுத்து குடித்து விட்டதாக ஜோதி பாசு போலீசிடமும் நண்பர்கள்களிடமும் தெரிவித்துள்ளார். போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்தனர்.
ஜெரால்டுவை விஷம் கொடுத்து ஜோதி பாசுதான் கொன்று விட்டதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என மறுநாள் ஊர் மக்கள் ஜெரால்டு உடலை வைத்து செம்பனார்கோவில் நல்லாடை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தனர். நேற்று மதியம் மங்கேநல்லூர் வீரசோழனாற்றுப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஜோதிபாசுவை போலீஸ்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். 12,மற்றும் 13ம்தேதி ஆகிய இரண்டு தினங்களாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜோதி பாசு திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு கைகுழந்தையுடன் அழைத்து வந்த ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியுள்ளார், அப் பெண்ணுக்கு ஜோதிபாசுமூலம் ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணுடன் ஜோதிபாசு கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை கண்ட பெண்மணி தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருப்பூர் சென்று விட்டார். கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. ஜோதி பாசுவும் அதே ஊரை சேர்ந்த ஜெரால்டுவும் வேன் டிரைவர். இவர்கள் இருவரும் மது குடிக்கும் பொழுது நண்பர்களாகினர். ஒரு நாள் தனது செல்போனில் சார்ஜ் இல்லை என்பதால் ஜெரால்டு போனை வாங்கி தன் காதலியுடன் ஜோதிபாசு பேசியுள்ளார்.
அவ்வப்பொழுது இதுபோல் ஜோதிபாசு இவரது போன் மூலம் கள்ளகாதலிக்கு பேசியுள்ளார் , நாளடைவில் ஜெரால்டும் அந்தப் பெண்ணுக்குப் தன்போன் மூலம் பேசி வந்துள்ளார். இதுகுறித்து ஜோதிபாசுவிடம் கள்ளக்காதலி கூறியுள்ளார், ஏற்கனவே தான் அழைத்து வந்து குடும்பம் நடத்திய பெண்ணும் பிள்ளைகளுடன் சென்றுவிட்டார். இந்நிலையில் கள்ளக்காதலியையும் ஜெரால்டு பிரிக்க பார்க்கிறானே என்ற ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
ஜெரால்ட் தொடர்ந்து ஜோதிபாசுவின் கள்ளக்காதலிக்கு போன் செய்து வந்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ஜோதிபாசு, எப்படியாவது ஜெரால்டை தீர்த்துக்கட்டிவிடவேண்டும் என திட்டம் தீட்டினார். இந்நிலையில் ஜெரால்ட் கடந்த 10ம் தேதி சென்னைக்கு வேலைக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தார். இது கேள்விப்பட்ட ஜோதிபாசு எப்படியாவது ஜெரால்டுவை சென்னை செல்வதற்குள் தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று திட்டம் போட்டு நல்லத்தூர் பகுதிக்குச் சென்று மது பாட்டில் வாங்கிக் கொண்டு நல்லாடை கிராமத்தில் உள்ள மருந்து கடையில் தென்னைக்கு வைக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து ஒரு பாட்டிலையும் வாங்கிக்கொண்டு வந்துள்ளார். கண்ணாத்தாள் படத்தில் சூனா பானா டெக்னிக்கு பயன்படுத்தி தன் மனைவி திருப்பூர் சென்று விட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள மதுவில் விஷம் கலந்து வைத்திருந்ததை ஜெரால்டு எடுத்து குடித்து விட்டார் என்று நாடகமாட திட்டம் போட்டிருந்தார்.
வழக்கமாக மது அருந்தும் தென்னம்பிள்ளை சாலையில் அமர்ந்து ஜோதிபாசு குடித்துக் கொண்டிருந்தார் அந்த சமயத்தில் மது போதையில் வந்த ஜெரால்டை அழைத்து சென்னைக்கு போகப் போகிறாயா? இன்று என்னுடன் சேர்ந்து மது அருந்து என்று கூறி விஷம் கலந்த மதுவை கொடுத்துள்ளார். ஜெரால்டும் அதை வாங்கி குடித்துவிட்டார் நேரம் செல்ல செல்ல ஜெரால்டு வயிற்று வலியால் துடித்து கீழே சாய்ந்து விட்டார். விஷம் கலந்த மதுவை ஜோதிபாசு தன் வாயில் ஊற்றி கொப்பளித்து துப்பிவிட்டார் அந்த வழியாக வந்தவர்கள், விஷ பாட்டில் அருகில் கிடப்பதும் இருவரும் மயங்கி இருப்பதைக் கண்டனர். அவர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதேபோன்று ஜோதி பாசுவையும் பைக் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கே இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது அப்பொழுது நான் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் கலந்த மதுவை வைத்திருந்த போது ஜெரால்டு எடுத்து குடித்து விட்டார், நானும் குடித்து உள்ளேன் என பொய் கூறியுள்ளார். சிகிச்சை பலனின்றி ஜெரால்ட் இறந்து விட்டார். ஜோதிபாசு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். ஆனால் அவரது உடலில் எந்தவித விஷமும் இல்லை என்பதால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.
பெரம்பூர் போலீசார் விசாரணையில் ஜோதிபாசு தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவரை பில்லாவடந்தை என்ற ஊருக்கு அழைத்து சென்று மது குடித்த இடத்தை பார்வையிட்டனர், அங்கே வீசப்பட்டிருந்த விஷ பாட்டிலையும் ஒரு மது பாட்டிலையும் கைப்பற்றினர். ஜோதி பாசு மற்றும் அவரது கள்ளக்காதலி, ஜெரால்ட் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி தகவல்களை சேகரித்தனர். ஜெரால்டுவின் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜோதிபாசுவை கைது செய்து செம்பனார் கோயிலில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்ய சுனா பானா காமெடி காட்சியை பயன்படுத்தி கொலை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.