வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்திட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கருத்து வேறுபாடுகளை கடந்து பா.ஜ.க.வை தோற்டிக்க வேண்டும் என்பதே நம்முடைய ஒற்றை இலக்காக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் பதவியைப் பெறுவதிலோ அதிகாரத்தைப் பெறுவதிலோ காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மேற்கு வங்காளத்திற்கு பல மத்திய குழுக்களை அனுப்பிய பா.ஜ.க. அரசு, ஏன் வடகிழக்கு மாநிலத்திற்கு மத்திய குழுவை அனுப்பவில்லை? மத்திய பா.ஜ.க. அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கம். பா.ஜ.க. அரசு மீண்டும் ஆட்சி அமைப்பது ஜனநாயகம் அழிந்து வருவதைக் குறிக்கும். எங்களுக்கு எந்த நாற்காலியும் வேண்டாம். 2024-ல் பா.ஜ.க.வை மத்தியிலிருந்து வெளியேற்றுவதைத் தவிர எங்களுக்கு வேறு எந்தக் கோரிக்கையும் இல்லை. 26 எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணியினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்தார்.