கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயதான பெண் பயிற்சி டாக்டர், ஆக.,09 ம் தேதி மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முக்கிய குற்றவாளியான போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராயை கைது செய்தனர். வழக்கை சிபிஐ விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக கோரி கோல்கட்டாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மம்தாவை கண்டித்து 12 மணிநேர முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ஜ., அழைப்பு விடுத்ததால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், திரிணமுல் காங்கிரசின் இளைஞர் அணி கூட்டத்தில் மம்தா பேசியதாவது: சட்டசபை கூட்டத்தை கூட்டி, பலாத்கார குற்றவாளிக்கு ஏழு நாட்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வருவோம்.
போராட்டம் நடத்தும் பா.ஜ.,விற்கு நீதி கிடைப்பதில் ஆர்வம் இல்லை. மாநிலத்தை அவமானப்படுத்த முயற்சி செய்கிறது. வரும் 31ல், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மறுநாள் பெண்கள் போராட்டம் நடத்த வேண்டும். உ.பி., ம.பி., மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுக்காக அம்மாநில முதல்வர்கள் பதவி விலகினாரா? இவ்வாறு அவர் கூறினார்.