தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி கடந்த 20 ஆம் தேதி காதலன் மதன்குமாரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இறந்த ஆசிரியை உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களை சந்தித்து பேசினர்.
அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், “மாணவிகள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்ட பிறகு வேறொரு தேதியில் பள்ளி திறக்கப்படும்” என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று, மல்லிப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில், மனநல ஆலோசர்களால் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங் நடத்தப்பட்டது_ மறுநாள் செவ்வாய்க்கிழமை பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை பள்ளி திறக்கப்பட்டது.
இதையடுத்து பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வகுப்பு தொடங்கும் நேரத்தில், ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடி மாணவர்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். அச்சம், கவலையின்றி கல்வி கற்று முன்னிலைக்கு வர வேண்டும். அரசு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்த தரும்” என உறுதி அளித்தார்