கோவை, சிவானந்தா காலனி சாஸ்திரி வீதியை சேர்ந்தவர் மணிக்குமார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு மணிக்குமார் தனது மளிகை கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்த போது முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஷட்டரைத் திறந்து உள்ளே
பார்த்த போது கடையில் வைத்து இருந்த சுமார் ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து மணிக்குமார் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பதிவான கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கடையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நள்ளிரவில் மளிகை கடையின் கதவை உடைத்து மர்ம நபர் கைவரிசை காட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.