மலையாள திரையுலகில், நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தால், பல நடிகையர் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். சில நடிகர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகுறுக்கன் அத்வைதம் போன்ற மலையாள படங்களில் நடித்தவர் நடிகை சவுமியா. தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்த இவர், அதன்பின் சினிமாவை விட்டே விலகி விட்டார்.இந்நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் சவுமியா அளித்துள்ள பேட்டி: “எனக்கு அப்போது 18 வயது, நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். என் பெற்றோருக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது. அந்த நேரத்தில் தான் ஒரு தமிழ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இயக்குநர் ஒருவர் தன்னை படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி தனது தந்தையிடம் பேசினார். இதற்காக பெரிய தொகையையும் இயக்குநர் சார்பில் தனது தந்தையிடம் வழங்கப்பட்டதால், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குநரும், அவரின் மனைவியும் என்னை கனிவுடன் நடத்தினர். அவர்கள் இல்லத்திற்கு என்னை அழைத்துச் செல்வார்கள். அங்கு உணவு, பழரசம் போன்றவை வழங்கி அவரின் மனைவி என்னை கவனித்துக்கொள்வார். ஒரு நாள் இயக்குனரின் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், என்னை மகள் போன்று நினைப்பதாக கூறி முத்தமிட்டார். அப்போதே, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. என்னுடன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். பின், அவரால் நான் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். ஓராண்டு காலம் அந்த இயக்குனரின் செக்ஸ் அடிமையாக இருந்தேன். பயத்தால் இதை அப்போது என்னால் கூற முடியவில்லை. இந்த அவமான உணர்வில் இருந்து வெளியே வர எனக்கு 30 ஆண்டுகளானது. பாதுகாப்பு கருதி பொதுவெளியில் இயக்குநரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும், சிறப்பு விசாரணைக் குழுவிடம் புகாரளிக்கும்போது முழு விவரங்களை அளிக்கவுள்ளதாக நடிகை சவுமியா கூறியுள்ளார்.
