தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் நிரூபர்களிடம் அவர் கூறியதாவது… அதிமுகவுக்கு எந்தக் காலத்திலும் பின்னடைவு வந்தது கிடையாது. அதிமுக என்பது மிகப் பெரிய இயக்கம். பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, யார் – யாருடன் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பையும் யாரும் ஏற்படுத்த முடியாது.
அதிமுக வலிமையான கூட்டணியில் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம். கொடநாடு வழக்கில் குற்றவாளிகளைச் சிறையில் அடைக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுத்தது எடப்பாடி பழனிசாமிதான். அன்றைக்கு வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டு, இன்றைக்கு அரசியலுக்காக ஓ. பன்னீர்செல்வம் பேசி வருகிறார்.
கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. ஆற்றுக்கு தண்ணீர் வந்தால் மட்டும் போதாது. கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வர வேண்டும். அப்போதுதான் முழுமையான பாசனம் பெற முடியும். பல இடங்களில் பயிர்கள் கருகி விட்டன. குறுவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பா சாகுபடியாவது நடக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
எனவே, ஜூலை மாதம் வரை தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை, கர்நாடகத்திலிருந்து கேட்டு பெற வேண்டும். முறை பாசனம் இல்லாமல், மேட்டூர் அணையிலிருந்து 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்தால்தான் விவசாயிகளைக் காப்பாற்ற முடியும். மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியைத் தமிழக அரசு தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.