Skip to content
Home » மயிலாடுதுறை ஓஎன்ஜிசி குழாயில் பராமரிப்புப் பணி…பொதுமக்கள் எதிர்ப்பு

மயிலாடுதுறை ஓஎன்ஜிசி குழாயில் பராமரிப்புப் பணி…பொதுமக்கள் எதிர்ப்பு

  • by Senthil

மயிலாடுதுறையை அடுத்த அடியாமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஓஎன்ஜிசியின் 2 எண்ணெய் எரிவாயு கிணறுகளில் 2015-ம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டதால் பணிகளை தொடராமல் நிறுத்தி வைக்கப்பட்டது. முள்புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த இந்த பகுதியை ஓஎன்ஜிசி அண்மையில் சுத்தம் செய்தது. தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின்படி நீரியல் விரிசல் முறையை பயன்படுத்த முடியாது என்பதால் அந்த கிணறுகளில் எண்ணெய் எரிவாயு எடுக்கும் முயற்சியை முற்றிலுமாக கைவிட்டு, 4 மாதங்களில் நிலத்தை சீர்செய்து, அதனை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடு பணிக்காக இடத்தை சுத்தம் செய்யும் போது, எரிவாயு குழாயில் லேசான சத்தத்துடன் எரிவாயு வெளியேறியதால் உடனடியாக அந்த எரிவாயு கசிவை சரிசெய்ய 2 நாள் பணிக்கு அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தது.

2015-ம் ஆண்டு பணியின்போது அங்கு எரிவாயு கசிவு காரணமாக அருகில்  உள்ள பள்ளிக்கூடத்தில் மாணவிகள் மயக்கமடைந்த நிலையில், அப்போதே நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைப்பதாக கூறிய ஓஎன்ஜிசி, தற்போது 9 ஆண்டுகளை கடந்த நிலையில் மீண்டும் அதே காரணத்தை கூறுவதால், ஓஎன்ஜிசி அங்கு பணிகளை தொடங்கவுள்ளதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது.

ஓஎன்ஜிசி செயல்பாடுகளை கண்டித்து ஜூலை 3-ம் தேதி மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கோட்டாட்சியர் யுரேகா தலைமையில், டிஎஸ்பி திருப்பதி முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஓஎன்ஜிசி தரப்பில் காரைக்கால் அசெட் உற்பத்தி பிரிவு மேலாளர் பி.என்.மாறன் தலைமையிலான ஓஎன்ஜிசி அலுவலர்களும், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் தலைமையில் ஒருமித்த கருத்துடைய கட்சி மற்றும் அமைப்பினர்களும் கலந்துகொண்டு, தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தனர்.

முடிவில், சம்பந்தப்பட்ட கிணற்றை அதிகாரிகளின் முன்னிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு நிர்வாகிகள் பார்வையிட்டு, அதில் திருப்திகரமான உடன்பாடு ஏற்பட்டால் ஓஎன்ஜிசி குழாயில் எரிவாயு கசிவு சீரமைப்புப் பணிகளை செய்ய அனுமதிப்பதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கூட்டம் நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!