மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 20ம் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் இத்தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவும் இந்தப் பட்டியலில் உள்ளார். மும்பை வோர்லி தொகுதியில் போட்டியிடும் அவர் தனக்கு ரூ.21.47 கோடி சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 தேர்தலில் ஆதித்ய தாக்கரே தனக்கு ரூ.17.69 சொத்துகள் உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு தற்போது சுமார் ரூ.4 கோடி உயர்ந்துள்ளது.
ஆதித்ய தாக்கரே கடந்த 2019 தேர்தலுக்கு மாறாக இம்முறை தன் மீது குற்ற வழக்கு உள்ளதாக கூறியுள்ளார். லோயர் பரோல் பகுதியில் சாலைப் பாலம் ஒன்றை சட்டவிரோதமாக திறந்து வைத்ததாக அவர் மீது எம்.என்.ஜோஷி சாலை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.