மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தின் மசாஜோக் கிராமத்தின் தலைவராக இருந்த சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஒரு எரிசக்தி நிறுவனத்தை குறிவைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியைத் தடுக்க முயன்றதாகக் கூறி அவர் கொலை செய்யப்பட்டார்.
சட்டப்பேரவையில் இதற்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த வழக்கில் தனஞ்சய் முண்டேவின் பெயர் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. எனினும், கொலைக்கு மூளையாக செயல்பட்ட வால்மிக் கரட், தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய உதவியாளர் என்பதால் இந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமைச்சர் தனஞ்சய் முண்டே இன்று (செவ்வாய்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார். முண்டேவின் ராஜினாமாவை தான் ஏற்றுக்கொண்டதாகவும், நடவடிக்கைக்காக அதனை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாகவும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (MCOCA) போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.