மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில், ஆளும் பா.ஜ கூட்டணி அபார வெற்றி பெற்றது. 235 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதில் பாஜக 132 இடங்களை பிடித்தது. சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் ஜேஎஸ்எஸ்2, ஆர்எஸ்பிஎஸ்1, ஆர்எஸ்விஏ1, ஆர்ஒய்எஸ்பி 1 இடத்தில் வெற்றி பெற்றன. தேர்தல் முடிவுகள் 23ம் தேதி அறிவிக்கப்பட்டன. 4 நாட்கள் ஆகியும் முதல்வர் தேர்வு செய்யப்படாதது அந்த கூட்டணிக்குள் குழப்பம் நிலவுவதை காட்டுவதாக மற்ற கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன.
ஷிண்டே முதல்வராக நீடிக்க வேண்டும் என சிவசேனா கட்சி தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதிக இடங்களை பாஜதான் கைப்பற்றியது என்பதால், பாஜவுக்குத்தான் முதல்வர் பதவி அளிப்பது நியாயம் என பாஜ மேலிடம் கருதுகிறது. இதனால்தான் பட்னாவிசை முதல்வர் ஆக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரம் காட்டுகிறது. அதற்காக முக்கிய துறைகள் தருவதாக பா.ஜ சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் முதல்வர் ஷிண்டே பிடிவாதத்தை விடுவதாக இல்லை .
அதே நேரத்தில் பாஜகவை எதிர்த்தால் தனது அரசியல் நிலை உத்தவ் தாக்கரேவை விட மோசமாகி விடும் என்பதையும் அவர் அறிந்துள்ளதால் கோபித்துக்கொண்டு வெளியே வர முடியாமலும், துணை முதல்வர் பதவியை ஏற்க முடியாமலும் தவிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதற்கான கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வழங்கினார். இந்த நிலையில், மராட்டியத்தில் துணை முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ஏற்க மறுத்ததை அடுத்து அவரது மகனுக்கு வழங்க பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ அதை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் ஷிண்டே கூறுகிறார். பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தான் மராட்டிய முதலமைச்சராக நியமிக்கப்பட்ட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
இதுவரை முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் என்சிபியின் அஜித்பவாருக்கு துணைமுதல்வர் பதவி தர பாஜக திட்டம் வகுத்தது. துணை முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ஏற்க மறுத்ததால் அவரது மகன் ஸ்ரீகாத்துக்கு அப்பதவியை தர பாஜக முன்வந்துள்ளது . அத்துடன், 57 தொகுதிகளைக் கைப்பற்றிய சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி தர பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த உடன்பாட்டின்படி இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் அவர் உடன்படாவிட்டாலும், நாளை தேவநே்திர பட்னாவிஸ் முதல்வராக பதவி ஏற்பார் என்று மும்பை வட்டார தகவலகள் கூறுகின்றன.