கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியான நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தினை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். ஹீரோவுக்கு மட்டுமல்லாமல் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஏற்படத்தை இயக்கியிருந்தார் நித்திலன். எனவே இந்த படம் தற்போது வரையிலும் பேசப்பட்டு பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 12ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் திரையிடப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.
அந்த வகையில் மகாராஜா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது, விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அதே சமயம் இந்த படத்திற்காக சிறந்த படத்தொகுப்பு விருது பிலோமின் ராஜ் பெற்றுக்கொண்டார். இது தொடர்பாக பேசிய விஜய் சேதுபதி, “சென்னை சர்வதேச திரைப்பட விழா கற்பிப்பதற்கான இடம். இந்த விழாவில் இரண்டாவது விருது பெறுகிறேன். இந்த விருது முழுக்க முழுக்க நித்திலனின் உழைப்பிற்காகவும் சிந்தனைக்காகவும் கிடைத்தது. என்னுடைய விடுதலை 2 திரைப்படம் வெளியாகிறது. அதனை பார்த்து ரசியுங்கள். குமுதா ஆல்ரெடி ஹேப்பி. வாத்தியார் திரைக்கு வருவார்” என்று தெரிவித்துள்ளார்.