உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். மேலும் 108 கோ பூஜையும் நடக்கும். அந்த வகையில் இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நந்திக்கு நேற்று மாலை மஞ்சள், சந்தனம், பால், திரவியம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு முதல் அலங்காரம் செய்யும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இன்று காலை 2 டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. கோயில் அருகே உள்ள ராஜ வீதியை சுற்றி உள்ள 108 பசு – கன்றுகளுக்கு கோயில் வளாகத்தில் சிறப்பு கோ பூஜைகள் செய்யப்பட்டது. அவற்றுக்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, புத்தாடை அணிவித்து சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.