மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிவன் கோவில்களில் விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரியகோயில், திருவாரூர் தியாகேசர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், சென்னை கபாலீஸ்வரர் கோயில், திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து சிவ ஆலயங்களில் விடிய விடிய சிறப்பு பூஜைகளுடன், பக்தியுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 6வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு சுவாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
. திருவிழாவின் 8வது நாளான இன்று சனிக்கிழமை மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. பகல் 1 மணிக்கு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும். மாசி சிவராத்திரியையொட்டி பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதுபோல் நாளை 19ம் தேதி பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகின்றது. திருவிழாவின் 9வது நாளானநாளை காலை 9.39 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
இதே போல சென்னை மயிலாப்பூரில் உள்ள 7 சிவ ஆலயங்களிலும் பள்ளிக்கரணை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருக்கச்சூர் ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயில், திருச்சி திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், சுசீந்திரம் தாணுமலயான் சுவாமி கோவில் தமிழகத்தின் முக்கியமான ஆலயங்களில், இன்று இரவு விடிய விடிய சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட சிவ ஆலயங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்னாடுடைய சிவனே போற்றி..எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற பக்தி முழக்கங்கள் ஒலித்த வண்ணம் இருக்கின்றன.
மகாசிவராத்திரி தினத்தில் சிவன் கோயில்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் சிதம்பரம், கும்பகோணம் போன்ற நகரங்களில் நடைபெறும் நாட்டியாஞ்சலி சிறப்பு பெற்றதாகும்.