கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நஞ்சைகாளிக்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ குங்கும காளியம்மன் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு அதற்கு முன்பாக புனித தீர்த்த கலசங்கள் பிரதிஷ்டை செய்து இருந்தனர். அதைத்தொடர்ந்து யாகசாலையின் பக்தர்கள் வழங்கிய பல்வேறு யாக மூலிகையால் மூன்று கால யாக பூஜை சிறப்பாக நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட கலசத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தை தலையில் சுமந்தவாறு ஆலயத்தை சுற்றி வலம் வந்து கோபுரம் கலசம் வந்தடைந்தார். பின்னர் கோபுர கலசத்திற்கு புனித தீர்த்தத்தின் மூலம் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கோபுரத்திற்கு சந்தனப் பொட்டிட்டு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. பின்னர் குங்கும காளியம்மன் மூலவர், மதுரைவீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகம் விழாவிற்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.