கோவை மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் சேதம் ஏற்படுத்திய மக்னா யானை பிடிக்கப்பட்டது. இந்த யானை பிடிபட்டதை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ்தேஜா நிருபர்களிடம் கூறியதாவது:
பிப்ரவரி 6ம் தேதி மக்னா யானை டாப்சிலிப் வனப்பகுதிகள் விடுவிக்கப்பட்டது. பத்து நாட்கள் வனப்பகுதிக்குள் இருந்த அந்த யானை கடந்த 19ம் தேதி அங்கிருந்து வெளியேறி விட்டது .
வனப்பகுதியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் இருந்து தற்போது வரை யானையின் நடமாடத்தை 70-100 வனத்துறையினர் கண்காணித்து வந்து தற்போது பிடிக்கப்பட்டுள்ளது.
இதில் 200 வனத்துறையினர், 100 காவல்துறையினர், கோவை, ஓசூர், சத்தியமங்கலம் பகுதியில் இருந்து வனத்துறை மருத்துவர் குழுவினர் ஈடுப்பட்டனர்.
மேலும் இந்த மக்னா யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது.யானையை எங்கு விடலாம் என உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும்.
யானைக் கடந்து வந்த தூரத்தில் இதுவரை எவ்வித உயிர் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பொருட்சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் சின்னத்தம்பி கும்கி யானை இந்த மக்னா யானையை பிடிக்க மிகவும் உதவியாக இருந்தது .
இவ்வாறு அவர் கூறினார்.
வனத்துறை மருத்துவர் சுகுமார் கூறியதாவது:
மக்னா யானையை பிடிக்க 4 மருத்துவக் குழுக்கள் செயல்பட்டது. மக்னா யானையை பிடிக்க தேவையான அளவிற்கு மட்டும் மயக்க மருந்து செலுத்தினோம். அந்த யானைக்கு 40லிருந்து 45 வயது இருக்கும்.
இது மக்னா என்ற போதிலும் யாரையும் தாக்காமல் அருகில் செல்பவர்களிடமிருந்து விலகி தான் சென்றது. அது அதனுடைய குணமாக இருக்கலாம். யானையை அடர் வனப்பகுதிக்குள் விடுவித்து உணவு குடிநீர் ஆகியவை வைத்து வனப்பகுதிக்குள்ளேயே இருக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.