மதுரை நத்தம் பாலத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரை நத்தம் பாலம் என்பது மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய வாகனங்களுக்கு எந்த ஒரு போக்குவரத்து இடையூறு இல்லாமல் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இப்பாலத்தில் செல்ல கூடிய வாகனங்கள் வேகமாக செல்வது வழக்கம். இருந்தாலும் ஆங்காங்கே வேகத்தடுப்புகள் போடப்பட்டிருக்கும்.
இதனிடையே இன்று பிற்பகல் மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்த லாரி ஒன்று நந்தம் பாலத்தில் பழுதாகி நின்றுள்ளது. அப்போது சென்னையிலிருந்து 7 பேர் கொண்டவர்கள் வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் முழுமையாக மோதியது. இதனால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டிவந்த ஓட்டுநர் மதியழகன் (39) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரிலிருந்த இருந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட மீதமுள்ள 6 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது அவர்கள் அருகில் உள்ள ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் தற்போது அந்த வாகனங்களையும் அந்த காரையும் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். பாலத்தின் மீது நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.