Skip to content
Home » மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் காலமானார்….

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் காலமானார்….

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் இன்று (மே 23) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 70.

கருமுத்து தியாகராஜர் செட்டியார் – ராதா தம்பதியின் ஒரே மகன் கருமுத்து கண்ணன். இவர் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் மேலாண்மை கல்லூரி ஆகியவற்றின் இயக்குநராகவும், தியாகராஜர் மில்ஸ், மீனாட்சி மில்ஸ், லட்சுமி மில்ஸ் போன்ற ஆலைகளின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

கல்விச் சேவைக்காக அறியப்பட்ட அவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக இருந்து வந்தார். அவரது ஆன்மிகப் பணியும் மக்களால் பாராட்டப்பட்டது,

அவரது பணிக் காலத்தில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம், கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு போன்ற பல்வேறு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்ததற்காக அறியப்பட்டார்.

கருமுத்து கண்ணன் மனிதநேய பண்பாளர். மிகச்சிறந்த தொழில் அதிபர் . இவர் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி , ஜெயலலிதா என இருவரின் அபிமானத்தையும் பெற்றவராக இருந்தார். அதனாலேயேஅடுத்தடுத்த ஆட்சிகள் மாறினாலும்கூட இவர் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக இருந்து வந்தார்.
அரசியல் ஆளுமைகளுடன் நெருக்கம் இருந்தாலும் கூட அரசியல் சார்பற்றவராகவே பொதுவெளியில் அறியப்பட்டார்.

மதுரை நகரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர் இவருடைய பொறியியல் கல்லூரி கலைக்கல்லூரிகளில் வசதியில்லாத மாணவர்களுக்கும் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். தமிழக அரசின் காமராஜர் விருதைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலக் கோளாறு காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை (மே 24) பகல் 2 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *