இந்தியாவின் நவ நதிகள் என போற்றப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, சரயு, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆகியன புண்ணிய நதிகளாக வும் கருதி பக்தர்கள் அங்கு நீராடி தங்கள் பாவத்தை தொலைத்து வருகிறார்கள்.
இதன் காரணமாக புனித நதிகளில் அதிக பாவங்கள் சேர்ந்தன. இதனால் கவலை அடைந்த இந்த நவ நதிகளும் சிவபெருமானிடம் சென்று, தங்களிடம் சேர்ந்த பாவங்களை போக்கிக் கொள்ள என்ன வழி என கேட்டன. அதற்கு சிவன், ‘மக நட்சத்திரமும் பவுர்ணமியும் இணையும் மாசி மாதத்தில் கும்பகோணத்தில் அக்னி திக்கில் உள்ள தீர்த்தத்தில் நீராடி உங்களின் பாவங்களை தீர்த்துக்கொள்ளுங்கள் என்றார்.
அதன்படி நவநதிகளும் கும்பகோணம் தீர்த்த குளத்தில் எழுந்தருளி, தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டு, புனிதமடைந்ததாக புராணக் கதைகள் உள்ளன. அந்த குளம்தான் கும்பகோணம் மகாமக குளம்.
எனவே கும்பகோணம் மகாமக குளத்தில் ஒவ்வொரு நாளும் பக்தர்கள் புனித நீராடி அதன் கரைகளில் உள்ள சோடசலிங்கங்களை வழிபட்டு செல்கிறார்கள். 12 வருடத்திற்கு ஒரு முறை இங்கு மகாமகம் கொண்டாடப்படுகிறது.
மாசிமகத்திருநாளான இன்று அதிகாலை முதல் கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர். இதற்காக கும்பகோணத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குடந்தையில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தபோதும் பக்தர்கள் நீராடிக்கொண்டிருந்தனர். காலை 11 மணிக்கு மேல் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் நீராடினர். அவர்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. அப்போது 10 சிவாலய பஞ்சமூர்த்திகள் மகாமக குளத்தை சுற்றி வந்து அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் அன்பழகன் எம்.எல்.ஏவும் பங்கேற்றார்.
மாசிமகத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. அவர்கள் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று விடாதபடி குளத்தில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
மாசிமகத்தையொட்டி கும்பகோணம் சாரங்பாணி கோயிலில் இன்று தேரோட்டம் நடந்தது. அங்குள்ள பொற்றாமரை குளத்தில் தெப்பத்திருவிழாவும் நடந்தது. இங்கும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தேரோட்டத்தில் பங்கேற்றனர்.