நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. வரும் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் மென்மையான முறையில் சந்திரயான்-3 தரையிறங்க உள்ளது. இந்தியாவுக்கு போட்டியாக ரஷியாவும் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை செலுத்தி உள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு, லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா செலுத்தியது. அதன்பிறகு, 47 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஆய்வு செய்ய முனைந்துள்ளது. கடந்த 10-ந்தேதி, லூனா-25 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. சந்திரயானுக்கு முன்பாகவே, வருகிற 21-ந்தேதி நிலவின் தென்துருவத்தில் லூனாவை தரையிறக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. அதாவது, ஏவப்பட்ட 11 நாட்களில் தரையிறங்குகிறது. இதற்கிடையில், கடந்த 17-ந்தேதி லூனா-25 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. தொடர்ந்து, அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், லூனா-25 விண்கலம் நாளை மறுநாள் நிலவில் தரையிறங்கிவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இறுதி சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்ப முடியாமல், தற்போதைய பாதையிலேயே லூனா-25 விண்கலம் சுற்றி வருகிறது. அவசர நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும், விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் ரஷிய விண்வெளி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் தகவல் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான பாதையில் வெற்றிகரமாக பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.