இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவுக்கும் வெற்றி கடினமாகவே இருந்தது.
இந்திய அணியில் பேட்ஸ்மேன்களால் பந்தை டைமிங் செய்யவே முடியவில்லை. சுப்மன் கில் (11), இஷான் கிஷான் (19), ராகுல் திரிபாதி (13) என சொற்ப ரன்களுக்கு வெளியேற 70/4 என்ற நிலை இருந்தது. எனினும் கேப்டன் பாண்ட்யா (15), துணைக்கேப்டன் சூர்யகுமார் யாதவ் (26) ரன்கள் அடித்து 19.5 ஓவர்களில் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டி 1ம் தேதி ஆமதாபாத்தில் நடக்கிறது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து கேப்டன் பாண்ட்யா கூறுகையில், ஆட்டத்தை முடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அது மிகவும் தாமதமாகிவிட்டது. கடினமான பிட்ச்-களை கண்டு நான் பதற்றமடையவே மாட்டேன். ஆனால் இந்த 2 டி20களும் நடந்த பிட்ச்-கள் அதிர்ச்சியை கொடுக்கின்றன. இவை டி20க்காக செய்யப்பட்ட பிட்ச்-களே கிடையாது.
பிட்ச்-களை கடைசி நேரத்தில் தயார் செய்தால் இதுபோன்ற சொதப்பல்கள் தான் ஏற்படும். எனவே மைதானத்தில் பிட்ச்-ஐ உருவாக்குவோர் முன்கூட்டியே தயார்படுத்தியிருக்க வேண்டும். 120 ரன்கள் என்பது இங்கு நல்ல ஸ்கோராகும். எதிரணி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யக்கூடாது என்பதில் இந்திய பவுலர்கள் தெளிவுடன் இருந்தனர். எங்களை விட அவர்களுக்கு அதிகம் ஸ்பின் ஆனது. எனினும் நாங்கள் சாதித்துவிட்டோம் என பாண்ட்யா கூறியுள்ளார்.