ஏழு கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தல் வாக்குளை எண்ணும் பணி சற்று நேரத்தில் துவங்க உள்ளது. நாட்டின் 543 தொகுதிகளில், தங்களுடைய எம்.பி.,யாக மக்கள் யாரை தேர்வு செய்துள்ளனர் அவர்கள் யார்? யார்? என்பது இன்று மதியத்திற்குள் தெரிந்து விடும். காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. அடுத்த சில மணி நேரங்களிலேயே, நாடு முழுவதிலும் முன்னிலை நிலவரம் தெரிய வரும். பா.ஜ.,வினர் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி என்பதில் நம்பிக்கையாக உள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் இதையே பிரதிபலித்தன. அதே நேரத்தில், ‘இவை வெறும் கணிப்புகள் தான்; உண்மை நிலவரம் எங்களுக்கு சாதகமாக இருக்கும்’ என, எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி கூறி வருகிறது. இந்த கணிப்புகளின் நம்பகத்தன்மையை, இன்று பகல் 12:00 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டிவிடும். பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தால், ஜவஹர்லால் நேருவுக்குப் பின், தன் கட்சியை தொடர்ந்து மூன்று தேர்தலில் வெற்றி பீடத்தில் நிறுத்திய பெருமை பிரதமர் மோடிக்கு கிடைக்கும். கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களிலும், பல மாநில சட்டசபை தேர்தல்களிலும் தோல்வி அடைந்த நிலையில், தன் பழைய பெருமையை மீட்டெடுப்பதற்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு இதுதான் பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.