இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம் ஹேவர்டு. இவருடைய காதலி எமிலி. இவர், சீன உணவு விடுதியில் சூப் ஒன்றை, ஆசையாக ஆர்டர் செய்து உள்ளார்.
அதனை வீட்டுக்கு கொண்டு வந்து காளான் நூடுல் சூப் என கூறி காதலருக்கு கொடுத்திருக்கிறார். காதலரும் ஆசையாக சூப்பை வாங்கி பருகியுள்ளார். 3-ல் இரண்டு பங்கு சூப் உள்ளே போனதும் சூப்பில் ஏதோ ஒன்று நகர்ந்து சென்று உள்ளது.
இதனை கவனித்த சாம், முதலில் அது ஒரு பெரிய காளானாக இருக்கும் என நினைத்திருக்கிறார். ஆனால், முதலில் ஒரு பெரிய வால் மேலே வந்துள்ளது. அதனை பார்த்து அவர் மிரண்டு போய் விட்டார்.
அதன்பின்பே அது எலி என அவருக்கு தெரிய வந்தது. இதனை வீடியோவாக எடுத்துள்ளார். அதன்பின் காதலி ஆர்டர் செய்த உணவு விடுதிக்கு தொலைபேசி வழியே போன் செய்து பேசியுள்ளார். எமிலி பணம் கொடுத்து உணவு வாங்கியபோதும், அதற்கான பில் அவரிடம் இல்லாமல் போனது. அதனால், அது தங்களுடைய உணவு இல்லை என்றும், பணம் திருப்பி தர இயலாது என்றும் உணவகம் கைவிரித்து விட்டது. இதனால், அவர்களால் அதனை நிரூபிக்கவும் முடியவில்லை.
எனினும், இதற்கு அவர்கள் மன்னிப்பு கோரினால் போதும் என்று சாம் கூறியுள்ளார். சமீபத்தில், அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் வசித்து வரும் ஒருவர், பிரபல ஆலிவ் கார்டன் என்ற இத்தாலிய உணவு விடுதியில் ஆர்டர் செய்த சூப் ஒன்றில் இறந்த எலியின் கால் ஒன்று கிடந்தது என குற்றச்சாட்டாக கூறினார். இதற்கு நஷ்ட ஈடாக ரூ.20.75 லட்சம் பணம் தரவேண்டும் என கோரியுள்ளார். எனினும், அவர் தங்களுடைய வாடிக்கையாளர் இல்லை என அந்த உணவகம் பதிலளித்தது.