விக்ரம் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் . தற்போது விஜய்யை வைத்து லியோ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராகவும், அவரது படங்களுக்கு பாடலாசிரியராகவும் பணியாற்றியவர் விஷ்ணு இடவன். இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற திரைப்படங்களில் லோகேஷிடம் இணை இயக்குனராக பணியாற்றினார்.
அதுமட்டுமின்றி மாஸ்டர் படத்தில் இடம்பெறும் பொளக்கட்டும் பற பற, விக்ரம் படத்தில் வந்த ‘போர்கண்ட சிங்கம்’ மற்றும் ‘நாயகன் மீண்டும் வரான்’ ஆகிய பாடல்களை எழுதியதும் விஷ்ணு இடவன் தான். மேற்கண்ட பாடல்கள் ஹிட் ஆனதை அடுத்து, விஷ்ணு இடவனுக்கு அடுத்தடுத்து பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் கவின் நடித்துள்ள டாடா திரைப்படத்திற்காகவும் விஷ்ணு இடவன் பாடல்களை எழுதி உள்ளார்.
இவ்வாறு சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் சர்ச்சையிலும் சிக்கி உள்ளார் விஷ்ணு இடவன். அதன்படி அவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்தபெண் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இருவீட்டாரும் கலந்துபேசி அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், விஷ்ணு இடவன் அப்பெண்ணைத் திருமணம் செய்ய மறுப்பதாகவும், இதனால் சென்னை திருமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து அப்பெண் புகார் அளித்துள்ளார்.