Skip to content
Home » டில்லியில் காதலியை கொன்று பிரிட்ஜில் அடைப்பு….போலீஸ்காரர் உள்பட5பேர் கைது

டில்லியில் காதலியை கொன்று பிரிட்ஜில் அடைப்பு….போலீஸ்காரர் உள்பட5பேர் கைது

  • by Authour

டில்லியின் நஜாப்கார் நகரில் மித்ராவன் கிராமப்புறத்தில் சாலையோர பகுதியில் உணவு விடுதி ஒன்று அமைந்து உள்ளது. இதில் உள்ள பிரீசரில், 25 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண் அரியானாவை சேர்ந்த நிக்கி யாதவ் (வயது 25) என தெரிய வந்தது. சாஹில் கெலாட் என்பவருடன் லிவ்-இன்டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவலின்போது, ஒன்றாக சந்தித்து கொண்ட இவர்கள், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நொய்டா நகரில் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

எனினும், இந்த திருமணம் பற்றி அறிந்த சாஹிலின் குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்து உள்ளனர். இதுபற்றி துவாரகா நகர கூடுதல் காவல் துணை ஆய்வாளர் விக்ரம் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, மித்ராவன் கிராமத்தில் வசிக்கும் உணவு விடுதி உரிமையாளரான சாஹில் கெலாட் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததில் குற்ற சம்பவம் தெரிய வந்தது.

தொடக்க விசாரணையில், இந்த பெண்ணுடன் சாஹில் லிவ்-இன் உறவில் இருந்து வந்து உள்ளார். இந்நிலையில், மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய அவர் முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண் அவரிடம் சென்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த நபர் போன் சார்ஜருக்கான வயரை கொண்டு கழுத்தில் இறுக்கி பெண்ணை கொலை செய்து உள்ளார்.

அவரது உடலை காரில் கொண்டு சென்று, உணவு விடுதியில் உள்ள பிரிட்ஜில் மறைத்து வைத்து உள்ளார் என கூறினார்.

கடந்த 9-ந்தேதி இரவில் இருவரும் சந்தித்து உள்ளனர். அதன்பின் 10-ந்தேதி காலை 9.30 மணியில் இருந்து 10.30 மணிக்குள் காரில் வைத்து, நிக்கி கொல்லப்பட்டு உள்ளார். இந்த வழக்கில், சாஹில் மற்றும் நிக்கி இடையேயான திருமண சான்றிதழ்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். நிக்கியின் உடலை பிரிட்ஜுக்குள் மறைத்து வைக்க சாஹிலின் நண்பர் மற்றும் உறவினர் உதவி உள்ளனர்.

நிக்கி கொலை சம்பவத்திற்கு பின் அவரது போனில் உள்ள சாட்டிங், வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. அது சாஹிலுக்கு எதிராக மிக பெரிய சான்றாக போலீசாருக்கு கிடைக்கும் என அறிந்தே சாஹில், அவற்றை அழித்து உள்ளார். அதன்பின், நிக்கியின் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, சிம்மையும் எடுத்து கொண்டார். அவற்றை போலீசார் சாஹிலிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

இன்று காலை வரை சாஹிலிடம் போலீசார் விசாரணை நடத்தினர், சம்பவம் நடந்த காஷ்மீரி கேட் பகுதிக்கு சாஹிலை இன்று காலை அழைத்து சென்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தவிர, நிக்கியை இரவில் அழைத்து சென்ற நிஜாமுதீன், ஆனந்த் விகார் ரெயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சாஹிலை அழைத்து சென்று, சம்பவம் நடந்த நேரம், காரணம் உள்ளிட்ட முழு, தொடர் விவரங்களை அறியும் முயற்சியில் ஈடுபட போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

கடந்த புதன்கிழமை போலீசார் கைப்பற்றிய சி.சி.டி.வி. பதிவில், நிக்கியின் பிளாட்டில், குற்றவாளி சாஹில் நுழையும் காட்சிகள் உள்ளன. நள்ளிரவு 12 மணிக்கு வந்து பின்னர், அதிகாலை 1 மணியளவில் பிளாட்டை விட்டு வெளியேறி, நிக்கியை அழைத்து கொண்டு சாஹில் சென்று உள்ளார். அதன்பின்பு, கொலை சம்பவம் நடந்து உள்ளது.

இந்த வழக்கில், சாஹில் கெலாட்டுக்கு உதவிய குற்றத்திற்காக அவரது தந்தை வீரேந்தர் சிங், ஆஷிஷ் மற்றும் நவீன் என்ற 2 உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அமர் மற்றும் லோகேஷ் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீர விசாரித்து, கொலை திட்டத்தில் அவர்களுடைய பங்கு பற்றி ஆய்வு செய்து, உறுதி செய்த பின்னரே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவர்களில் டில்லி போலீசில் கான்ஸ்டபிளாக நவீன் உள்ளார்.

இந்த கொலை சம்பவத்திற்கு பின்னர், சக குற்றவாளிகளிடம் சாஹில் விவரங்களை கூறி உள்ளார். இதன்பின்னர், ஒன்றும் தெரியாததுபோன்று அனைவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளனர் என சிறப்பு குற்ற பிரிவு போலீஸ் கமிஷனர் ரவீந்தர் யாதவ் கூறியுள்ளார். கடந்த ஆண்டு டில்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண், அவரது காதலரான அப்தாப் என்பவரால் கொலை செய்யப்பட்டு, 35-க்கும் மேற்பட்ட துண்டுகளாக ஆக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அதேடில்லியில் லிவ்-இன் முறையில் வாழ்ந்து, மற்றொரு அதிர்ச்சியூட்டும் பரபரப்பு கொலை சம்பவம் நடந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *