கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் சியாம் சுந்தர் (30). இவர் ஊட்டியில் பணியாற்றியபோது அங்கு பயிற்சி டாக்டராக பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (27) என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது டாக்டர் சியாம் சுந்தர் பிரேமாவுடன் மிகவும் அன்பாக பேசி பழகியுள்ளார். அப்போது ஒரு நாள் திடீரென சியாம் சுந்தர் பிரேமாவிடம் காதலிப்பாக கூறியிருக்கிறார். தனக்கு திருமணமாகவில்லை என்றும் கூறி உள்ளார்.
அதனை நம்பிய பிரேமா பயிற்சி முடித்து கோவையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார். சியாம் சுந்தர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பணிமாறுதலாகியுள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் டாக்டர் சியாம் சுந்தர் பிரேமாவை அவ்வப்போது தனிமையில் சந்தித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
சியாம் சுந்தரிடம் எப்போது என்னை திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள். வீட்டில் வந்து பெண் கேளுங்கள் என்று பிரேமா கூறியுள்ளார். அதன்பின் பிரேமாவிடம் சியாம் சுந்தர் பேசுவதை குறைத்துள்ளார். மேலும் பிரேமா சியாம் சுந்தரை நேரில் சந்தித்து பேச பல முறை முயற்சித்துள்ளார். அதன்பின்னர் சியாம் சுந்தர் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். அதற்கு சியாம் சுந்தரின் அம்மா, அக்கா மற்றும் அவரது மாமா அனைவரும் பிரேமாவை திட்டி துரத்தி விட்டனர். அந்த அப்பார்ட்மென்டில் அவர்கள் பிரேமாவை அவமானப்படுத்தி உள்ளனர்.
பின்னர் தான் சியாம் சுந்தர் குறித்து பிரேமா தரப்பினர் விசாரித்த போது, அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் இதுபோல் பல பயிற்சி மாணவிகளிடம் டாக்டர் சியாம் சுந்தர் காதலிப்பதாக கூறி ஏமாற்றி உல்லாசமாக இருந்து வருவதாகவும் பிரேமா தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து மருத்துவக்கல்லூரி டீனிடம் புகார் அளித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. சியாம்சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தாரால் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்றும் பயந்துள்ள பிரேமா, இதுகுறித்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சியாம் சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சியாம் சுந்தர், அவரது அம்மா, அக்கா மற்றும் மாமா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.