தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மகன் மாரிச்செல்வம் இவருக்கு 23 வயது ஆகிறது. மாரிச்செல்வம் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகா என்ற இளம் பெண்ணை மாரிச்செல்வம் காதலித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் வெளியே தெரிந்தது.இந்த காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த 3 தினங்களுக்கு முன்பு, அதாவது கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திகா, மாரிச் செல்வத்தை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மாரி செல்வத்தின் திருமணத்தை அவரது வீட்டில் ஏற்றுக் கொண்டனர்.
கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் உள்ள தனது பெற்றோருடைய வீட்டில் தான் மாரிச்செல்வம், தனது மனைவி கார்த்திகா உடன் வசித்து வந்தனர். மாரிச்செல்வம் பெற்றோர் நேற்று வெளியே சென்று விட்டனர். வீட்டில் புதுமண ஜோடி மட்டுமே இருந்தனர்.
அப்போது மூன்று மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்கு வந்த நிலையில், எதுவுமே பேசாமல் ஆவேசத்துடன் கையில் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மாரிச் செல்வம், கார்த்திகாவை பயங்கரமாகவெட்டி சாய்த்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் காதல் ஜோடிகள் இருவருமே உயிரிழந்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் உடனே விரைந்து வந்து கார்த்திகா, மாரிச் செல்வம் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இன்று காலை பெண்ணின் தந்தை முத்துராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
முத்துராமலிங்கத்திற்கு 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், மூத்த மகளான கார்த்திகா, பொருளாதார வசதி குறைவான மாரிச் செல்வத்தை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததால், இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இன்று மாலை உடற் கூராய்வு முடிந்து புதுமணஜோடியின் உடல்கள் மாரிச்செல்வம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.