கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அக்கரை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அபிராமி (வயது20). இவர் சுங்கான்கடை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு பறக்கை அருகே உள்ள புல்லுவிளையை அடுத்த காமச்சன்பரப்பை சேர்ந்த ஜெகதீஷ் (23) என்பவர் அடிக்கடி வந்து செல்வார். இதில் மாணவிக்கும் ஜெகதீசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது.
இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் அபிராமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளை கண்டித்தனர். அத்துடன் மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர் அதன்படி கேரளாவை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து இன்று (புதன்கிழமை) திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அபிராமி திடீரென மாயமானார். அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அபிராமியின் தந்தை சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் மாயமான அபிராமியை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அபிராமி தனது காதலன் ஜெகதீசுடன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
அவர்கள் போலீசாரிடம், தாங்கள் தீவிரமாக காதலித்து வருவதாகவும், தங்களை சேர்த்து வைக்குமாறு கெஞ்சினர். இதுகுறித்து போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். அபிராமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்துக்கு வந்து மகளை தங்களுடன் வருமாறு கெஞ்சி அழைத்தனர். ஆனால் அபிராமி காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார்.
பெற்றோர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடத்திய பாச போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து போலீசார் காதல் ஜோடியிடம் எழுதி வாங்கி விட்டு அபிராமியை காதலனுடன் சேர்த்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.