திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர் ஜெயக்குமார்(33) திருப்பூர் மாவட்டம், முத்தூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கவிதா (22) இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆன்லைன் ரம்மியில் விளையாடிய ஜெயகுமார், அதில், 10 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து தனது மனைவியிடம், இரண்டு லட்சம் ரூபாய் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த நெய்க்காரன்பட்டி அருகே கோவில்பட்டி அவரது தந்தை பிறந்த ஊர் என்பதால், நேற்று முன்தினம் அங்கு வந்தவர், மாலை மூன்று மணிக்கு, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது, அங்கிருந்த முதியவர், தடுத்து அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி் வைத்துள்ளார். இதற்கிடையில், நேற்று (ஏப்ரல் -1) செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு, தனது ஹோண்டா பேஷன் பிரோ பைக்கில் நெய்க்காரப்பட்டி பாண்டியன் நகர் ரயில்வே டிராக்கிற்கு ஜெயக்குமார் வந்துள்ளார். அங்கு, தனது பைக்கை நிறுத்திவிட்டு, ரயிலுக்காக காத்திருந்தார். மாலை 3 மணிக்கு, சேலம் – மயிலாடுதுறை சென்ற ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இரண்டாக துண்டானது.
தகவலறிந்த, சேலம் ரயில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி, விசாரணை நடத்துகின்றனர். மேலும், மோகனூர் போலீசாரும் சம்பவ இடத்தக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தனியார் வங்கி துணை மேலாளர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.