கரூர் மாவட்டம், குளித்தலை அருகே லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரை சேர்ந்தவர் முருகேசன் மகன் விக்னேஷ் (27) லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் பிரவீன். இவர் கஞ்சா போதையில் மனம் போன போக்கில் தன்னை பெரிய ரவுடியாக காட்டிக்கொண்டு வலம் வந்துள்ளார்.
தற்போது பொங்கல் பண்டிகையொட்டி அப்பகுதியில் விளையாட்டுப் போட்டி விழா நடைபெற்று உள்ளது. இந்த போட்டியினை விக்னேஷ், அவரது மற்ற நண்பர்கள் ஏற்பாடு செய்து நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த பிரவீன் அங்கு உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள்
கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் தான் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா உங்களை சும்மா விட மாட்டேன் என்று கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் விக்னேஷ் லாலாப்பேட்டை ஆண்டியப்பன் நகர் மைதானத்தில் தனது புல்லட் வாகனத்தில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த பிரவீன் விக்னேஷின் கழுத்தில் மீன் வெட்டும் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த நண்பர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது பரிதாபமாக உயரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கடங்கில் வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் வைத்திருந்த விக்னேஷின் உடலை கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து தப்பி ஓடிய கஞ்சா போதை ஆசாமி பிரவீனை தேடி வருகின்றனர். குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட குளித்தலை, லாலாபேட்டை, மாயனூர் காவல் நிலைய பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா புழக்கத்தில் உள்ளதால் இங்கு பல்வேறு கொலை குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.