தமிழகத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாகக் கேரளாவிற்குக் கனிமவளங்களை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும், அதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதும் சகஜமாகியுள்ளது.
குறிப்பாக, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த வழித்தடத்தில் கனிமவளம் ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில், மார்த்தாண்டம் சுற்றுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் செங்கோடு அருகே கொற்றவிளை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஞானதாஸ். இவரது மனைவி பீனா (52). இருவரும் தங்கள் ஊரிலிருந்து நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தனர்.
மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக குழித்துறை பகுதியில் உள்ள பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த கனரக லாரியானது, இவர்களின் இரு சக்கரவாகனத்தில் மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த பீனா மீது லாரி ஏறியது. இதனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் ஞானதாஸ் காயமடைந்தார்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் சகாய பால்சன் என்பவரை தேடி வருகின்றனர். கேரளாவுக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற லாரி மோதி பெண் ஒருவர் பலியான சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் இது மாதிரியான விபத்துகளைத் தொடர்ந்து அந்த பகுதியில் அதிவேகமாகச் செல்லும் கனரக லாரிகள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.