அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் அலுவலகங்கள், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் ஆகியோர் நேரில் நேற்று கள ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றையதினம் (30.01.2025) அரியலூர் வட்டம், ஓட்டக்கோவில் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி பார்வையிட்டு, குளோரின் பயன்படுத்தப்படும் முறைகள், குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரம், குடிநீரின் தரம், நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்படும் நாட்களின் விவரம் ஆகியவை குறித்து
ஆய்வு மேற்கொண்டார். பின்னர், சாலையக்குறிச்சி கிராமத்தில் குடிநீர் குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சாலையக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு தயார் செய்யப்படும் சமையல் கூடத்தினை பார்வையிட்டு, உணவுப்பொருட்களின் தரம், இருப்பு விவரம், மாணவர்களின் வழங்கப்படும் உணவின் அளவு உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்து, மாணவர்களுக்கு உணவினை தொடர்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்து வழங்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டாட்சியர் அரியலூர் முத்துலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.