திருச்சியை தலைமையிடமாக கொண்டு செல்பட்டது பிரணவ் ஜூவல்லரி. செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என்ற வாசகத்துடன் கடைகளை மதுரை, தஞ்சை, கும்பகோணம், சென்னை, புதுச்சேரி என 10க்கும் மேற்பட்ட இடங்களில் பரப்பியது. அத்துடன் பழைய நகைகள் ஏன் வீட்டில் தூங்குகிறது? அவற்றை எங்கள் கடைகளில் கொண்டு வந்து டெபாசிட் செய்யுங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே எடைக்கு புதிய தங்க நகைகள், புதிய டிசைன்களில் என விளம்பரம் செய்தார் இந்த கடையின் உரிமையாளர் திருச்சியை சேர்ந்த மதன்.
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜைக்கொண்டு டிவிக்களிலும் விளம்பரம் செய்தார். மக்கள் குவிந்தனர். பழைய நகைகளை ஒப்படைத்தனர். நகை சீட்டுகள் சேர்ந்தனர். இப்படியாக குறுகிய காலத்தில் ரூ.100 கோடிக்கு மேல் சேர்த்தார்மதன்.
கடந்த மாதம் திடீரென மதுரை, திருப்பரங்குன்றம் பிரணவ் ஜூவல்லரி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே கடைகள் முன் கூடி ஒப்பாரி வைத்தனர். போலீசில் புகார் செய்தனர்.
இந்த சம்பவங்களுக்கு பிறகு திடீரென பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் நான் எங்கும் போகவில்லை. வாடிக்கயைாளர்களிடம் இருந்து ரூ.30 கோடி தான் வசூலித்து உள்ளோம். அதற்கான சொத்து என்னிடம் உள்ளது. விரைவில் திருப்பி கொடுப்பேன் என அதில் கூறி இருந்தார்.
இந்த நிலையில் பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் திருச்சியை சேர்ந்த மதன், அவரது மனைவி கார்த்திகா இருவரையும் காணவில்லை. அவர்களை தேடுகிறோம் என போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளனர். தீபாவளிக்கு புது நகைகள் அணியலாம் என பழைய நகைகளை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கு புஸ்ஸ் வாணத்தை கொடுத்து ஓடிவிட்டார் மதன்.
இதனால் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.