பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தை பா.ஜனதா எம் பி அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
எதிர்க்கட்சி தலைவராக அவர் ஆற்றிய இந்த முதல் உரையில், பிரதமர் மோடி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையாக சாடினார்.மேலும் அக்னிபாத் திட்டம், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை குறிப்பிட்டும் மத்திய அரசை அவர் சாடினார். இதற்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட அந்தந்த துறை மந்திரிகள் குறுக்கிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக எம்.பிக்கள் கும்பலாக ஏய்ய்……என மிரட்டும் தொனியில் குரல் எழுப்பி இடையூறு செய்தனர். ஆனாலும் ராகுல் 100 நிமிடம் பேசினார். அவர் ஆஙு்கிலத்தில் ஆற்றிய உரை இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிகமான மக்கள் அவரது உரையை பார்த்து உள்ளனர். இவ்வாறு எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியின் முதல் உரை மக்களவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவை குறித்து ராகுல்காந்தி முன்வைத்த விமர்சனங்கள் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை. இந்துக்கள், பிரதமர் மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் குறித்த பேச்சில் சில பகுதிகள் நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
ராகுல் ஆற்றிய உரை தொடர்ந்து ஆங்கிலத்திலேயே கேட்கமுடியாதவாறு அதனை இந்தியில் மொழியாக்கம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.