18வது மக்களவையில் பாஜகவுக்கு 240 இடங்கள் கிடைத்தது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி என்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து 234 இடங்களை கைபற்றி ஆளுங்கட்சிக்கு இணையாக உள்ளனர். இந்த நிலையில் வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. முதல் 2 நாட்கள் எம்.பிக்கள் பதவி ஏற்பு விழாவும், அதைத்தொடர்ந்து சபாநாயகர் தேர்வும் நடக்கும்.
கடந்த 17வது மக்களவையில் எதிர்க்கட்சிகள் பலமில்லாமல் இருந்ததால் வழக்கமாக நியமிக்கப்படும் துணை சபாநாயகர் பதவியே இல்லாமல் மக்களவையை பாஜக நடத்தி முடித்தது. அதுபோல இந்த முறையும் துணை சபாநாயகர் பதவி இல்லாமல் நடத்துவது பாஜகவுக்கு அத்தனை சுலபமல்ல.
நாடு விடுதலை அடைவதற்கு முன்பு 1925-ம் ஆண்டு முதல் 1946 வரை சபாநாயகர் பதவிக்கு 6 முறை தேர்தல் நடத்தப்பட்டு உள்ளன. ஆனால் சுதந்திர இந்தியாவில் இதுவரை மக்களவை சபாநாயகர்கள் அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே போட்டியின்றி தேர்வு செய்து வருகின்றனர். இதுவரை அதற்கு தேர்தல் நடத்தப்பட்டது இல்லை.
எனவே இந்த முறையும் அந்த மரபை தொடர வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.ஆனால் துணை சபாநாயகர் பதவியை மரபுபடி எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்தால் சபாநாயகர் பதவியை ஒருமித்த கருத்து அடிப்படையில் தேர்வு செய்யலாம் என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சிகள் உள்ளன. துணை சபாநாயகர் பதவியை தராவிட்டால் சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது என்பதில் இந்தியா கூட்டணி உறுதியாக உள்ளது.
அப்படி போட்டி வந்தால் அதை சமாளிக்கும் விதமாக சந்திரபாபு நாயுடுவின் கொளுந்தியாளான ஆந்திரா பாஜக தலைவரான புரந்தேஸ்வரியை சபாநாயகர் பதவிக்கு நிறுத்தி வெற்றி பெற்று விடலாம் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது கொளுந்தியாளை எதிர்த்து தெலுங்குதேசம் கட்சி ஓட்டுப்போடாது என்பதிலும் பாஜக உறுதியாக உள்ளது. எனவே சபாநாயகர் தேர்வு விஷயத்தில் பாஜக மரபினை கடைபிடிக்கப்போகிறதா அல்லது மரபை மீறி எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தப்போகிறதா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும். டில்லி அரசியலில் மக்களவை சபாநாயகர் பிரச்னை தான் இப்போது ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.