18வது லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. 3வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பதவியேற்பதற்கான கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. இதன்படி, இன்றும், நாளையும், எம்.பி.,க்கள் பதவியேற்க உள்ளனர். நாளை மறுதினம், 18வது லோக்சபாவின் சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க உள்ளது. புதிய லோக்சபாவின் முதல் கூட்டம் என்பதால், 27ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நடக்கும். இதற்கிடையே, பிரதமர் மோடி தன் அமைச்சரவையை பார்லிமென்டில் அறிமுகம் செய்வார். இறுதியில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார். அடுத்த மாதம் 3ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, 22ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது. முன்னதாக இன்று காலையில், இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பார்த்துஹரி மஹதபுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜனாதிபதி மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து, பார்லிமென்டுக்கு சென்று அவர் பொறுப்பை ஏற்பார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.,க்கள் பட்டியலை, லோக்சபா செயலர் உத்பல் குமார் சிங், சபையில் தாக்கல் செய்வார். முதலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, எம்.பி.,யாக பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவரைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் பதவியேற்பர்.