நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் என்டிஏ ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக கூட்டணி சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியிடம் 1.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதேபோல நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணி சார்பில் எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸிடம் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விடையந்தார். இதேபோல அதிமுக கூட்டணி சார்பில் விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார்.தேர்தல் முடிந்து 45 நாட்களுக்குள் மட்டுமே தேர்தல் வழக்கு தொடர முடியும் என்ற நிலையில், கடைசி நாளான இன்று ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகியோர் இன்று ஒரே நாளில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்து, தங்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்தனர்.