பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை டில்லி மேலிடம் அழைத்தது. அங்க 2 நாள் முகாமிட்டிருந்த அண்ணாமலை, தேசிய தலைவர் நட்டா, அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன், ஆகியோரை சந்தித்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார்.
அதிமுக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையின் பேச்சுத்தான் காரணம் என பாஜக மேலிட தலைவர்கள் குற்றம் சாட்டினார்களாம். இனி அதிமுக தலைவர்கள் பற்றியோ, மறைந்த தலைவர்கள் பற்றியோ பிரச்னைக்குரிய கருத்துக்களை தெரிவிக்க கூடாதுஎனவும் உத்தரவிடப்பட்டதாம்.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் , டில்லியில் என்ன நடந்தது என கேட்டனர். அதற்கு பதிலளிக்க விரும்பாத அண்ணாமலை 2 நாள் ஸ்டோரி எழுதுங்கண்ணா என கூறியவாறு கடந்து சென்று விட்டார். வழக்கமாக பேட்டி என மைக்கை நீட்டினால் தாராளமாக பேட்டி கொடுப்பார். ஆனால் நேற்று அவர் பேட்டியை தவிர்த்ததை பார்த்தால் , டில்லி அவருக்கு ஏதோ உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது என பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இந்த நிலையில் நாளை நடைபெறும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். அப்போது டில்லியில் என்ன நடந்தது, இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விளக்கி கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.