தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார்.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளை பொருத்தவரை ஒரு மாநகராட்சி மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி, நகர் மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி, பேரூராட்சிக்கு ஒரு மாற்றுததிறனாளி என ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஒரு மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக வைத்து குழு அமைக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல், ஊரக உள்ளாட்சிகளை பொறுத்தவரை கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய குழு, மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் ஒரு மாற்றுத்திறனாளியை நியமன உறுப்பினராக நியமிக்கும் வகையில் ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்து சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுள்ளது.
நகர்புற உள்ளாட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் இரண்டு மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்காலம் முடியும் வரையில் இவர்கள் பதவியில்இருப்பார்கள். இந்த சட்டமசோதா சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இறுதி நாளில் நிறைவேற்றப்படும்.