கர்நாடகாவின் தெற்கு பெங்களூரு பகுதியில் வாடகை கட்டிடம் ஒன்றில் காதலர்கள் 2 பேர் ஒன்றாக தங்கியுள்ளனர். இதில் காதலரான வைஷ்ணவ் (வயது 24) உள்ளூர் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் பிரிவில் செயலதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். அவருடன் ஒன்றாக வசித்த இளம்பெண் தேவி (வயது 24) தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், வைஷ்ணவுக்கு, திடீரென தேவி மீது சந்தேகம் வந்துள்ளது. அவருக்கு வேறு எவருடனோ தொடர்பு உள்ளது என்று சந்தேகித்துள்ளார். இதுபற்றி தேவியிடம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினமும் இதுபோன்று தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டனர். இதில், ஆத்திரத்தில் அந்த நபர், பிரஷர் குக்கரை கொண்டு அந்த பெண்ணை அடித்து, தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.
இதுபற்றி பெங்களூரு நகர தென்கிழக்கு மண்டல காவல் துறையை சேர்ந்த டி.சி.பி. பாபா கூறும்போது, இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். லிவ்-இன் முறையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். 3 ஆண்டுகளாக ஒன்றாக படித்த அவர்கள், வாடகை கட்டிடத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். அந்த பெண்ணை பற்றி சில தினங்களுக்கு முன்னர், குற்றவாளிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தகராறில், அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி படுகொலை என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு பற்றி அவர்களின் இரு குடும்பத்தினருக்கும் தெரிந்துள்ளது. அவர்கள் இருவரையும் பல்வேறு தருணங்களில் சமரசப்படுத்த முயன்றுள்ளனர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.